ராமநாதபுரம் : முதலிரவில் கணவரிடம், காதலித்து கர்ப்பமாக இருப்பதை கூறிய மனைவி, ராமநாதபுரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காதலனை கைப்பிடித்தார்.
ராமநாதபுரம் அருகே சூரங்கோட்டையை சேர்ந்த பாண்டி மகள் உமா மகேஷ்வரி, 22. ராமநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பட்டதாரி கார்த்திக் ராஜா,27. இருவரும் கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்தனர். இதில், உமா மகேஷ்வரி மூன்று மாதம் கர்ப்பமானார். இதையறியாத உமா மகேஷ்வரியின் பெற்றோர், சாயல்குடி முனியசாமி என்பவருக்கு, கடந்த மாதம் 23ம் தேதி திருமணம் செய்து வைத்தனர்.
முதலிரவில், "தான் ஏற்கனவே ஒருவரை காதலித்து கர்ப்பமாக உள்ளதாக' கணவரிடம் தெரிவித்தார். இதையடுத்து முனியசாமி, ஊர் பெரியவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உமாமகேஷ்வரியை, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
இதன்பின், ராமநாதபுரம் மகளிர் போலீசில் உமா மகேஷ்வரி புகாரின்படி, காதலன் கார்த்திக் ராஜா மற்றும் அவரது பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்மதம் பெற்றார். போலீஸ் ஸ்டேஷன் வாசலில் உள்ள பிள்ளையார் கோவிலில், இன்ஸ்பெக்டர் மீனாம்பாள் தலைமையில், உமா மகேஷ்வரிக்கும், கார்த்திக் ராஜாவுக்கும், நேற்று முன்தினம் இரவு திருமணம் நடந்தது.
=======
- காதல் புரிந்து கர்பவதியான மகளை ஒரு அப்பாவி இளைஞனை ஏமாற்றி திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் பெண்ணை பெற்றவர்கள். முதலிரவில் பெண் உண்மையை சொன்னதும் காவல்நிலையத்தில் பெண்ணை காதலனுடன் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.
- மணமகனை ஏமாற்றிய பெண்ணின் பெற்றோருக்கு தண்டனை இல்லை. மணமகனின் பெற்றோர் பெண்ணின் குடும்பத்தை ஏமாற்றி திருமணம் செய்தால் மட்டும்தான் தண்டனையா? பெண்ணை பெற்றவர்கள் ஏமாற்றினால் தண்டனை கிடையாதா?
- சட்டப்படி “மேஜரான” பெண்ணின் விருப்பத்திற்கெதிராக அதுவும் ஒரு கர்பவதியை கட்டாயப்படுத்தி வேறு ஒரு ஆணுக்கு திருமணம் செய்த பெண்ணின் பெற்றோர் குற்றவாளி கிடையாதா? பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் எங்கே போனது?
- முறைப்படி நடந்த திருமணத்தை சட்டப்படியாக ரத்து செய்யாமல் காவல் நிலையத்தில் திருமணத்தை ரத்து செய்து வேறு ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் இந்திய திருமண சட்டங்கள் வெறும் வெற்றுச் சட்டங்களா? நீதிமன்றங்கள் வெட்டி மன்றங்களா?
- இவையெல்லாம் அப்படியே தலைகீழாக நடந்து ஏதோ ஒரு காரணத்தால் மணமகன் திருமணத்தை நிறுத்தியிருந்தால் உடனடியாக மணமகனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் மீதும் பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்திருப்பார்கள்.
- காவல் நிலைய தெய்வங்கள் கண்ணை மூடிக்கொண்டு மணமகனின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கைது செய்திருப்பார்கள்.
- நீதிமன்றம் பெண்ணுக்கு நீதி வழங்காமல் ஓய மாட்டோம் என்று வரதட்சணை சட்டங்களை பக்கம் பக்கமாக புரட்டிக்கொண்டிருக்கும்.
இதுதான் இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான சட்டங்கள். இந்தியத் திருமணம் என்ற தகனமேடையில் சிக்கினால் அப்பாவி இளைஞர்களின் வாழ்வு நாசமாவது உறுதி.