பெங்களூரு: பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது, வழக்கறிஞர்கள் ஆக்ரோஷ தாக்குதல் நடத்தினர். உதவிக்கு வந்த போலீசார் மீதும், வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியதால், பல மணி நேரம் பதட்டம் நிலவியது. கோர்ட் வளாகம் போராட்டக்களமானது. போலீசார் தடியடி நடத்தியதோடு, வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர்; கண்ணீர் புகை குண்டு வீசினர். வழக்கறிஞர்கள் தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
சட்ட விரோத சுரங்கத் தொழில் விவகாரம் தொடர்பாக, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியிடம், கூடுதல் விசாரணை நடத்த அனுமதி கேட்டு, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ஆஜர்படுத்த ஐதராபாத்திலிருந்து அவரை அழைத்து வந்தனர். அப்போது, பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்திருப்பதை பார்த்து, வழக்கறிஞர்கள் கடும் கோபமடைந்தனர். ஏற்கனவே சில சம்பவங்களால், பத்திரிகையாளர்கள் மீது வழக்கறிஞர்கள் கோபம் கொண்டிருந்தனர். இந்த விரோதம் நேற்று கலவரத்துக்கு காரணமானது.போலீசார் குவிப்பு: பெங்களூரு கோர்ட் வளாகத்தில், ரெட்டி காரிலிருந்து இறங்கும் இடத்தில் கேமராமேன்கள் தயாராக இருந்தனர். இதைக் கண்ட வழக்கறிஞர்கள், இவர்களுக்கு எந்த வேலையும் இல்லையா. "எங்களை ரவுடிகள் என்று விமர்சித்த மீடியாக்களை, கோர்ட் வளாகத்தில் அனுமதிக்க முடியாது' என்று கூறி விரட்டினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். வழக்கறிஞர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது, கேமராமேன் ஒருவரை, வழக்கறிஞர்கள் கல்லால் தாக்கினர். ஆத்திரமடைந்த பத்திரிகையாளர்கள், அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, கோர்ட் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையில், ஜனார்த்தன ரெட்டியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு, வெளியே அழைத்து வரும் போது, அங்கிருந்த பத்திரிகையாளர்கள், ஜனார்த்தன ரெட்டியிடம் பேட்டி எடுக்க முற்பட்டனர். அதை பார்த்த சில வழக்கறிஞர்கள், ஆத்திரத்துடன் சத்தம் போட்டனர். அப்போது, வழக்கறிஞர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் தலையிட்டு, நிலைமையை கட்டுப்படுத்த முயன்றனர்.
கலவரமாக மாற்றம்: ஆனால், போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. வழக்கறிஞர்களை கோர்ட்டுக்குள் செல்லுமாறு போலீசார் கூறினர். அதை வழக்கறிஞர்கள் பொருட்படுத்தவில்லை. ஒரு புறம் பத்திரிகையாளர், வழக்கறிஞர்கள் மோதிக்கொண்டனர்; மறுபுறம் போலீசார், வழக்கறிஞர்கள் இடையே மோதல் உருவானது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது.
போலீசார் கெஞ்சல்: கோர்ட்டுக்குள் தனியாக சிக்கிக் கொண்ட போலீசாரை, வழக்கறிஞர்கள் ஓட, ஓட விரட்டித் தாக்கினர். போலீசார், தப்பித்தோம், பிழைத்தோம் என்று கோர்ட் அறைக்குள் தஞ்சம் புகுந்தனர். ஆங்காங்கே இருந்த கோர்ட் ஹால்களிலும் பதட்டம் நிலவியது. நீதிபதிகளிடம், தங்களை காப்பாற்றுமாறு போலீசார் கெஞ்சினர். கோர்ட் வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கோர்ட் அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக புரளி கிளம்பியது. இதனால், போலீசார் மொத்த கோர்ட்டையும் சுற்றி வளைத்து, எவ்வித அசம்பாவிதமும் நடக்காத வகையில் எச்சரிக்கை செய்தனர்.விரட்டி, விரட்டி தாக்குதல்: இதே நேரத்தில், கோர்ட்டிலிருந்த சில வழக்கறிஞர்கள், தங்கள் கையில் கிடைத்த கற்கள், செங்கற்கள், பூந்தொட்டிகள், இரும்பு நாற்காலிகள் ஆகியவற்றை எடுத்து போலீசார், பத்திரிகையாளர்களை நோக்கி வீசினர். அதே போன்று, கோர்ட்டின் வெளிப்பகுதியிலிருந்து வழக்கறிஞர்களை நோக்கியும், கற்கள் சரமாரியாக வீசப்பட்டன. கண்ணில் கண்டவர்களை எல்லாம் விரட்டி, விரட்டி வழக்கறிஞர்கள் தாக்கினர். இதில் பலர் படுகாயமடைந்தனர். சிட்டி சிவில் கோர்ட் வளாகம் போர்க்களம் போன்று காட்சியளித்தது. இச்சம்பவத்தில், மத்திய மண்டல டி.ஜி.பி., ரமேஷ் படுகாயம் அடைந்தார். 20 க்கும் மேற்பட்ட போலீசார், பத்திரிகையாளர்கள் பலர் காயமடைந்தனர். பப்ளிக் "டிவி', ஸ்வர்ணா "டிவி', ஜனஸ்ரீ "டிவி' உட்பட பல கன்னட சேனல்களின் கேமராமேன்கள் படுகாயமடைந்தனர். நேரடி ஒளிபரப்பு செய்ய நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சூறையாடப்பட்டன.
துப்பாக்கிச் சூடு: இந்தக் கலவரத்தை தடுத்து நிறுத்த, போலீசார் இரு முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர், கண்ணீர்புகை குண்டு வீசி கலவரக்காரர்களை கலைத்தனர். நிலைமை மோசமடைவதைக் கண்ட போலீசார், பத்திரிகையாளர்களை, கே.ஆர்.சர்க்கிள் அருகில் அழைத்துச் சென்று, கோர்ட் அருகில் போகாத வகையில் எச்சரித்தனர்.இந்த தகவல் வெளியானவுடனேயே, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி, கூடுதல் கமிஷனர் சுனில் குமார், கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி விக்ரமித்ஜித் சென், கோர்ட் நடவடிக்கையை நிறுத்தினார். கூடுதல் போலீசார் அங்கு குவிக்கபட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கோர்ட் அருகிலுள்ள அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் மீதும் வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தினர். இதைக் கண்டித்து, அவர்கள் போராட்டம் நடத்தினர். சிறிது நேரம் கழித்து, மீண்டும் கோர்ட் வளாகத்தில் பிரச்னை உருவானது. கோர்ட்டில் நிறுத்தப்பட்டிருந்த, 15 க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொளுத்தப்பட்டன. கூட்டத்தினரைக் கலைக்க, போலீசார் மீண்டும் தடியடி நடத்தினர். அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போலீஸ்காரர் படுகாயம்: இதற்கிடையில், வழக்கறிஞர்கள் இரும்பு நாற்காலிகளைத் தூக்கி வீசியதில், பலத்த காயமடைந்த கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிள் சந்திரப்பாவுக்கு, பவுரிங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒன்பது போலீசாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால, பெங்களூருவில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணை: முதல்வர்: "வழக்கறிஞர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள முடியாது. பத்திரிகையாளர், போலீசார் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது. கலவரம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதியின் மூலம் விசாரணை நடத்தப்படும்' என, முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்தார்.
பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில், பத்திரிகையாளர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தையடுத்து, தன் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில், முதல்வர் சதானந்த கவுடா ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அசோக், மாநில தலைமைச் செயலர் ரங்கநாத், உள்துறை செயலர், டி.ஜி.பி., சங்கர் பிதரி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி உட்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல்வர் சதானந்த கவுடா கூறுகையில், ""சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்துள்ள சம்பவம், வெட்கி தலைகுனிய வேண்டிய அவமான நிகழ்ச்சி. வழக்கறிஞர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் அவசரமாக விசாரணை நடத்தி, மாலைக்குள் விரிவான முதல் தகவலை தெரிவிக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.இதற்கிடையில், முதல்வர் சதானந்த கவுடாவை சந்தித்த பத்திரிகையாளர்கள், தங்கள் மீது வழக்கறிஞர்கள், ரவுடிகளைப் போன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்; 30 பேரை பயங்கரமாகத் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில், போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும், ஒன்பது பேர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில், பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றனர். நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களை கண்டித்து, மாநிலம் முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.பெங்களூரில் நடந்த சம்பவம் ஒன்றும் புதிதல்ல!!!!!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 2009ல் நடந்த சம்பவம்
Police, lawyers clash at Madras HC
19 Feb 2009





==============
சமுதாயத்தில் நீதியை நிலைநாட்ட சட்டங்களை பயிற்றுவித்து சட்ட மேதைகளை உருவாக்கும் சென்னை சட்டக் கல்லூரியில் 2009ம் ஆண்டு நடந்த கலவரம்

No comments:
Post a Comment