சீனாவை சேர்ந்த "டிங்டிங்' கிற்கு தேவகோட்டையில் "டும் டும் டும்'
ஜூன் 27,2011 தினமலர்
தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், சீனாவைச் சேர்ந்த பெண், "டிங்டிங்' கிற்கு, இந்திய கலாசாரப்படி, "டும் டும் டும்' நடந்தது. தேவகோட்டையைச் சேர்ந்த சேதுக்கரசு - காளியம்மாள் தம்பதிகளின் மகன் லெட்சுமண பெருமாள், 29; சிங்கப்பூரில் பொறியாளராக உள்ளார். அந்நிறுவனத்தில், சீனாவைச் சேர்ந்த உபென்ஜிசியங் - சன்சான்குவா தம்பதியரின் மகள், டிங்டிங், 26, பணிபுரிந்தார். அங்கு, இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டது.
நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும், பெற்றோரின் ஒப்புதலுடன் திருமணம் முடிக்க எண்ணினர். ஒப்புதல் கிடைத்ததும் இந்திய கலாசாரப்படி திருமணம் நடத்த முடிவு செய்தனர். மணமகளுக்கு, இந்தியா வர கடந்த வாரம் விசா கிடைத்தது. இருவரும் திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன், தேவகோட்டை வந்தனர். நேற்று, இருவருக்கும் திருமணம் நடந்தது.
இது குறித்து மணமகள் கூறுகையில், "தமிழ் இணையதளம் மூலம் தமிழ் கற்றுவருகிறேன். சீன முறைப்படி மோதிரம் மாற்றுவதோடு திருமணம் முடிந்துவிடும். தமிழக கலாசாரம் என்னை அதிகளவில் ஈர்த்துவிட்டது. என் பெற்றோருக்கு விசா கிடைக்காததால், என்னை ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தனர். இந்திய குடும்பத்தில் ஒருவராக நான் மாறியிருப்பது, எனக்கு பெருமையை தருகிறது' என்றார்.