ஆகஸ்ட் 11,2011 தினமலர்
புதுடில்லி : மனைவியை விட்டு, 25 ஆண்டுகள் பிரிந்திருந்த கணவருக்கு, விவாகரத்து வழங்க, டில்லி ஐகோர்ட் மறுத்து விட்டது. டில்லியைச் சேர்ந்தவர் அமர்லாலா அரோரா; இவரது மனைவி சசிபாலா. இருவருக்கும், 1987ல் திருமணம் நடந்தது. 88ல் பெண் குழந்தை பிறந்தது. கணவரின் முரட்டு குணத்தாலும், மாமியார் மற்றும் நாத்தனார்களின் இம்சையாலும், சசிபாலா தன் தாய் வீட்டுக்கு சென்றார். "அதன் பின், தான் சென்று அழைத்தும் சசிபாலா வர மறுத்து விட்டதாகவும், தன்னை அவர் புறக்கணித்து விட்டதால், கோர்ட் விவாகரத்து அளிக்க வேண்டும்' என, அரோரா, டில்லி கோர்ட்டில் மனு செய்திருந்தார். கீழ் கோர்ட் இவருக்கு விவாகரத்து அளிக்க மறுத்து விட்டதால், ஐகோர்ட்டில் அரோரா மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி கைலாஷ் காம்பிர் விசாரித்தார்.
"பட்டு கூட்டிலிருந்து வெளியே வரும் புழுவை போல, பெண்ணானவள் தன் பிறந்தகத்தை விட்டு கணவன் வீட்டுக்கு வரும் போது அவளுக்கு அந்த வீடு புதிய சூழலாக உள்ளது. அப்படிப்பட்ட புதிய சூழலை, பழக்கப்படுத்தி கொள்வதற்கு ஏற்ப கணவன் வீட்டார் அவளை அன்பாகவும், சிநேகமாகவும் நடத்த வேண்டும். அதை விட்டு வேற்று மனிதராக அந்த பெண்ணை பார்க்கும் போது பிரச்னைகள் ஏற்படுகின்றன' எனக்கூறி, அரோராவின் மனுவை நீதிபதி நிராகரித்து விட்டார்.
No comments:
Post a Comment