கிருஷ்ண ராதையை உதாரணம் காட்டி உச்சநீதிமன்றம் உறவுமுறையைப் பற்றி ஒரு கருத்து வெளியிட்டிருந்தது. அதற்கு பொருந்தும் விதமாக கிருஷ்ணரின் உபதேசம் போன்றே இன்று நடப்பதும், நேற்று நடந்ததும், நாளை நடக்கப்போவதும் நன்றாகவே நடக்கிறது இந்த நாட்டில்.
இன்று நீதிமன்றம் சொன்னது..........தினமலர் மார்ச் 24,2010
புதுடில்லி : 'திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் விரும்பும் பட்சத்தில் இணைந்து வசிப்பதோ எந்தவிதத்திலும் தவறு இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தொடர்பாக சினிமா நடிகை குஷ்பு, 2005ல் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். தமிழ் கலாசாரத்தை பாதிக்கும் வகையில் குஷ்பு தனது கருத்தை தெரிவித்ததாகக் கூறி அவர் மீது தமிழக கோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் குஷ்பு மனு தாக்கல் செய்தார். இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா மற்றும் சவுகான் ஆகியோர் முன்னிலையில் நேற்று வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தகுந்த வயதை அடைந்த இருவர் ஒன்றாக வாழ்வதை எப்படி குற்றமாக கருத முடியும்? ராதையும், கிருஷ்ணனும் ஒன்றாகவே வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வதையோ தவறு என எந்த சட்டமும் கூறவில்லை. குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தனது தனிப்பட்ட சொந்த கருத்துக்கள். எந்தவகையில் அது கலாசாரத்தை சீரழிப்பதாக கருதமுடியும்? எத்தனை வீடுகள் இந்த பேட்டியால் பாதிக்கப்பட்டுள்ளன? இவ்வாறு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
======================================================
நேற்று......
இன்றைய நீதிமன்ற கருத்திற்கு முன்பே காவல்துறை ஜோடி நீதிமன்ற கருத்தை மதித்து நடக்கும் விதமாக முன்னுதாரணம் காட்டி நேற்றே ஆரம்பித்துவிட்ட நிகழ்ச்சி. அதனால் நீதிமன்றம் சொல்வதெல்லாம் பழைய செய்திதான்!
தினமலர் மார்ச் 25,2010
திண்டுக்கல் : அமைச்சருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்காரர் ஒருவர், தன்னுடன் குடும்பம் நடத்தி விட்டு, மற்றொரு பெண்ணை நிச்சயம் செய்துள்ளதாக, பெண் போலீஸ் ஒருவர், திண்டுக்கல் எஸ்.பி., முத்துசாமியிடம் புகார் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, கட்டகாமன்பட்டியைச் சேர்ந்தவர் உதயசூரியன்(25); அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் உள்ளார். இவருக்கும், வீரசிக்கம்பட்டியைச் சேர்ந்த கனி (23) என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கனி, வேலூர் ஆயுதப்படையில் பெண் போலீசாக உள்ளார். இவர், ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்; நான்கு வயதில் ஒரு மகன் உண்டு. உதயசூரியனும், கனியும் இரண்டு ஆண்டுகளாக பழகி வந்தனர். உதய சூரியனுக்கு, வேறு ஒரு பெண்ணுடன் நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதையறிந்த பெண் போலீஸ் கனி, திண்டுக்கல் எஸ்.பி., முத்துசாமியிடம் கொடுத்துள்ள புகாரில், 'போலீஸ்காரர் உதயசூரியன், என்னுடன் குடும்பம் நடத்தினார். என் குழந்தை, அவரை அப்பா என்று தான் அழைக்கும். என்னை ஏமாற்றி விட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துள்ளார். என்னுடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு அவர் பதில் சொல்லட்டும்' என்று கூறியுள்ளார். விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.=========================================================
நாளை......
நீதிமன்றம் சொல்வதற்கு முன்பே என்றோ ஆரம்பித்து நாளை நன்றாக செழித்து வளரப்போகும் உறவுகள்.......
தினமலர் பிப்ரவரி 28,2010
புதுடில்லி:திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு குறித்து தேசிய அளவில் நடத்தப்பட்ட சர்வேயில் வியப்பான விஷயம் தெரியவந்துள்ளது; இந்த விஷயத்தில், நகர மக்களை, கிராம ஜோடிகள் மிஞ்சி வருகின்றன என்பது தான் அந்த தகவல். இந்தியாவில், 15 வயதில் இருந்து 24 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள், 15 வயதை அடையும் முன்னரே உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்று சர்வே தெரிவிக்கிறது.மத்திய சுகாதார அமைச்சகம் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் குறித்த சர்வேயை எடுக்க ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய ஆறு மாநிலங்களை தேர்ந்தெடுத்தது; 15 சதவீத இளைஞர்களிடமும், 4 சதவீத இளம் பெண்களிடமும் இந்த சர்வே எடுக்கப்பட்டது.
சர்வேயில் தெரியவந்துள்ள தகவல்கள்: திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத ஆண், பெண்கள் வகையில் மொத் தம் 51 ஆயிரம் பேர்களிடம் சர்வே எடுக்கப்பட்டது.பெண்களை
ஆண்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், 24 சதவீத இளம் பெண்கள், 15 வயதை அடையும் முன்னரே உடலுறவு கொண்டுள்ளனர். ஆனால், இளைஞர்கள் வகையில் 9 சதவீதம் பேர் தான் திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துள்ளனர்.திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்வது இந்தியாவில் பரவலாக இருந்து வருகிறது. டில்லியில் உள்ள மக்கள் தொகை கவுன்சிலும், மும்பையில் உள்ள பன்னாட்டு மக்கள் தொகை விஞ்ஞான பயிற்சி மையமும் சேர்ந்து நடத்திய விரிவான கணக்கெடுப்பில் இந்தியாவில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் தான் இளம் வயதினர் திருமணத்திற்கு முன் அதிகமாக செக்ஸ் வைத்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
இளைஞர்களில், திருமணத்துக்கு முன், நகர்ப்பகுதியில் 17 சதவீதம் பேரும், கிராமப்பகுதியில் 29 சதவீதம் பேரும் உடலுறவில் ஈடுபடுகின்றனர். அதே சமயம் இளம்பெண்களில் கிராமப்பகுதியில் 46 சதவீதமும், நகர்ப்பகுதியில் 31 சதவீதம் பேரும், திருமணத்துக்கு முன்னதாகவே உடலுறவு கொள்கின்றனர். நகர்ப்புறத்தில் ஒரு சதவீதமும், கிராமப்புறத்தில் 6 சதவீத இளைஞர்களும் 18 வயதை அடையும் முன்னர் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். 26 சதவீத இளைஞர்களும், 46 சதவீத இளம்பெண்களும், 15 வயதை அடையும் முன்னர் தங்களுடைய காதலருடன் செக்சில் ஈடுபட்டு அதிக நேரத்தை செலவழிக்கின்றனர்.
பெரும்பாலானவர்களின் செக்ஸ் உறவுகள் மிகவும் அபாயகரமாக உள்ளது. அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்கின்றனர். 25 சதவீத இளைஞர்களும், 21 சதவீத இளம் பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்கின்றனர்; உறவின் போது காண்டம் பயன்படுத்துவது குறைந்த அளவே இருந்து வருகிறது. ஆண்களில் 13 சதவீதத்தினரும், பெண்களில் மூன்று சதவீதத்தினரும் காண்டம் பயன்படுத்துகின்றனர்.இந்த ஆறு மாநிலங்களை பொறுத்தவரையில் உடலுறவுகள் பரவலாக பாதுகாப்பற்ற முறையில் தான் நடக்கின்றன. இந்த வித்தியாசம் மாநிலங்களிடையே மாறுபடுகின்றன. ராஜஸ்தான் தவிர மற்ற ஐந்து மாநிலங்களில் இளைஞர்கள் 32 சதவீதம் பேர் ஒன்றுக்கு மேற்பட் டோருடன் உறவு கொள் கின்றனர். ராஜஸ்தானில் 14 சதவீதமே நடக்கிறது.இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.
( பாதுகாப்பற்ற இந்த உறவுகளால் இளமையில் கருவுறுதல், பாலியல் வியாதிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அந்த சூழ்நிலையை எப்படிக்கையாள்வது என்று இப்போதே சட்டங்களை எழுதிவிட்டால் நல்லது. பிறகு எதிர்காலத்தில் இந்த பிரச்சனைகள் குறித்து வேலையற்ற ஏதாவது ஒரு சமூகநல விரும்பி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் அதை சமாளிக்க எந்தவித சட்டங்களும் இயற்றப்படவில்லையே என்று நீதிமன்றங்கள் குழப்பமடையாமல் இருக்க உதவியாக இருக்கும். இல்லையென்றால் புராணங்களில் ஏதாவது நாட்டுவைத்திய முறை இருக்கிறதா என்று தேடவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.)=============================================================
நேற்று நடந்ததும், நாளை நடக்கப்போவதும் இதுவரை இது சரியா தவறா என்ற சந்தேகத்துடனே நடந்துகொண்டிருக்கிறது. நீதிமன்றமே அங்கீகாரம் கொடுத்தபிறகு இனி எந்தவித அச்சமும் இல்லாமல் இது நன்றாகவே நடக்கும்.
நீதிமன்றத்தின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை கவனத்தில் வைத்துக்கொண்டு இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவரவர் மத வழக்கத்திற்குட்பட்டு முறைப்படி திருமணம் செய்து வாழும்போதே பல பொய் கேசுகளில் சிக்கி பல இளைஞர்கள் வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கின்றனர் இந்த நாட்டில்.
முறையற்ற, கட்டுப்பாடற்ற உறவுமுறைக்கு நீதிமன்றமே பச்சைக்கொடி காட்டியபிறகு இளைஞர்களுக்குத்தான் மேலும் பல ஆபத்துக்கள் காத்திருக்கின்றன. இதுபோன்ற உறவுகளில் வரதட்சணை கொடுமை வழக்கைத்தவிர பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு போன்ற பல கேசுகளை எளிதாகப் போட்டு நினைத்ததை சாதித்துக்கொள்ளும் வாய்ப்பு மிக அதிகம். அதனால் இளைஞர்களே மிகவும் விழிப்புடன் இருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
இங்கு சொல்லப்பட்ட விஷயம் “கற்பு”, “கத்தரிக்காய்” என்று பிதற்றுவதற்காக அல்ல. இளைஞர்களே, எதிர்காலத்தில் அமோகமாக செழித்துவளரப்போகும் பொய்வழக்குகளிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத்தான் இந்த பதிவு.