லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது : கோடிக்கணக்கில் சொத்து ஆவணங்கள் பறிமுதல்
தினமலர் பிப்ரவரி 15,2012
திருச்சி : திருச்சியில் பெண் டெய்லர் கொடுத்த நில மோசடி புகாரை விசாரிக்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருச்சி மன்னார்புரத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 45. இவர் அதேபகுதியில் டெய்லர் கடை வைத்துள்ளார். மாதத்தவணை முறையில் நிலம் வாங்க, அகிலாண்டேஸ்வரி குரூப் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் பணம் கட்டியுள்ளார். பணம் கட்டி முடிந்ததும், அந்த நிறுவனத்தினர் ஒரு இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
அந்த இடத்தை பார்க்க சரஸ்வதி, கடந்தாண்டு டிசம்பர் மாதம் சென்றுள்ளார். பத்திரத்தில் உள்ளபடி இடமே அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த மாசனமுத்துவிடம், கடந்த ஜன.,3 தேதி புகார் செய்தார். புகாரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நீதிமோகனை விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் நீதிமோகனை சந்தித்த சரஸ்வதி, அவர் பலமுறை அலையவிட்டு, புகார் குறித்து விசாரணை நடத்தாமல் இழுத்தடித்துள்ளார்.
கடைசியாக நேற்று முன்தினம் (14ம் தேதி), இன்ஸ்பெக்டர் நீதிமோகனை புகார் தொடர்பாக சந்தித்துள்ளார். அப்போது அவர், "5,000 ரூபாய் கொடுத்தால் தான் புகாரை விசாரிக்க முடியும்' என்று கறாராக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீசார் ஆலோசனைப்படி, நேற்று காலை கன்டோன்மென்ட்டில் உள்ள மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து சரஸ்வதி, 5,000 ரூபாயை, இன்ஸ்பெக்டர் நீதிமோகனிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் நீதிமோகனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து, 5,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் நீதிமோகனின் கருமண்டபம் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் வங்கிக் கணக்கு புத்தகம், லாக்கர் சாவி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காலிமனை பத்திரங்கள், கார் சாவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
காக்கிகளின் கைது படலம் : கடந்த 2007ம் ஆண்டு முதல் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் ஒன்பது இன்ஸ்பெக்டர்களும், ஒரு ஏ.சி.,யும், ஒரு எஸ்.ஐ., ஒரு எஸ்.எஸ்.ஐ.,யும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே குற்றப்பிரிவில் ஏ.சி.,யாக இருந்த முருகன், இன்ஸ்பெக்டர் சிவராஜ் பிள்ளை, ஏர்போர்ட் இன்ஸ்பெக்டர் முருகேசன், கன்டோன்மென்ட் எஸ்.ஐ., பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.ஐ., கோபி, தா.பளூர் இன்ஸ்பெக்டர் கணேசன், வாங்கல் இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி, சோமரசம்பேட்டை சாமுவேல் ஞானம், பெரம்பலூர் ஜோசப் சிரில், குளித்தலை வரலட்சுமி, துறையூர் காந்தி ஆகியோர் லஞ்ச வழக்கில், கடந்த ஐந்து ஆண்டுகளில் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment